ஜுராசிக் வேர்ல்டு – திரை விமர்சனம்

Jurassic World Review : [usr=4.5 size=20]

ஜுராசிக் பார்க் படம் வெளியாகி பல வருடங்களுக்கு பின் வெளியாகியுள்ள ‘ஜுராசிக் வேர்ல்ட்’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு பல ஆச்சரியங்களை அளிக்கிறது.

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான், தற்போது உள்ள அறிவியல் வளர்ச்சிகளைக் கொண்டு மக்களுக்கு அதிக கேளிக்கை அளிக்கக்கூடிய ஒரு தீம் பார்க்கை உருவாக்குகிறார்.

ஜுராசிக் வேர்ல்ட் எனும் அந்த தீம் பார்க்கின் செயல்பாட்டு மேலாளராக க்லேய்ரி இருக்கிறார். இவர் பல்வேறு விதமான டைனோசர்களை ஆராய்ந்து அதன் மரபணுக்களை எவ்வாறு மாற்றம் செய்யலாம் எனும் ஆய்வில் தீவிரமாக இருக்கிறார்.

தீம் பார்க்கிற்கு வரும் மக்களின் கவனத்தை பெற பிரத்யேக ஆய்வாளர்கள் குழு ஒன்று ‘இண்டோமினஸ் ரெக்ஸ்’ எனும் புத்திக் கூர்மையுடைய டைனோசரை மரபணு மாற்று முறையில் உருவாக்குகின்றது.

‘இண்டோமினஸ் ரெக்ஸ்’ டைனோசர் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறையின் அளவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளதா? என்பதை ஆராய்ந்து உறுதி செய்ய ஓவன் கிராடியை வரவழைக்கின்றனர். இவர் டைனோசர்களின் தன்மையை அறிந்து அவற்றுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் இருக்கிறார்.

இந்நிலையில் க்லேய்ரியின் உறவுக்கார சிறுவர்கள் ஸாச் மற்றும் கிரே ஆகியோர் தீம் பார்க்கை சுற்றி பார்க்க வருகிறார்கள். சிறுவர்கள் இருவரும் டைனோசர்கள் இருக்கும் இடத்தை பார்க்க அமைக்கப்பட்டிருக்கும் கைரோஸ்பியரில் ஏறிச் செல்கின்றனர்.

அவர்கள் வந்து சென்ற பின்னர், ‘இண்டோமினஸ் ரெக்ஸ்’ டைனோசர் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு செல்லும் ஓவன் கிராடி, அங்கு டைனோசர் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைகிறார். அனைவருக்கும் இந்த செய்தி அவசரமாக அனுப்பி வைக்கப்படுகிறது.

‘இண்டோமினஸ் ரெக்ஸ்’ டைனோசர் உடலில் இவர்கள் பொருத்திய கண்காணிப்பு கருவியை அந்த டைனோசர் அகற்றியிருப்பதை அறியும் ஓவன் கிராடி, இவர்கள் நினைத்ததைவிட அந்த டைனோசரின் புத்திக்கூர்மை அதிகமாக இருப்பதை உணர்கிறார். உடனடியாக அந்த டைனோசரை கண்டறியும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், அந்த டைனோசர் ஸாச் மற்றும் கிரேவை தாக்கி, தீம் பார்க்கை சேதப்படுத்தி வருகிறது. இதனிடையே வெவ்வேறு அறைகளில் அடைக்கபட்டிருக்கும் பல விதமான டைனோசர்கள் வெளியே வந்து மக்களை அச்சுறுத்துகிறது. முறையான பாதுகாப்பு இல்லாமல் தீம் பார்க்கில் உள்ள மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

கடைசியில் டைனோசர்களை அழித்து தீம் பார்க்கில் உள்ள 20,000 க்கும் மேற்பட்ட மக்களை ஓவன் காப்பாற்றினாரா? ‘இண்டோமினஸ் ரெக்ஸ்’ டைனோசரால் தாக்கப்பட்ட ஸாச் மற்றும் கிரேவின் நிலை என்ன? போன்றவற்றை விறுவிறுப்பான திரைக்கதையில் இயக்குனர் கோலின் ட்ரே வொர்ரோ கூறியுள்ளார்.

ஜுராசிக் வேர்ல்டின் கதை பின்னணி குறித்து தெரிந்திருந்தாலும் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவம் அளிக்கும்படி, டைனோசர்களை வைத்து வாட்டர் ஷோ, கைரோஸ்பியர் போன்றவற்றை கொண்டு திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பாக உள்ளது.

மரபணு மாற்றுமுறையில் டைனோசர்களை உருவாக்கி அவற்றிற்கு பிற விலங்குகள் போல பயிற்சி அளிப்பது போன்ற பல வித்தியாசமான ஐடியாக்களை இப்படம் கொண்டுள்ளது. இப்படத்தின் காட்சியமைப்பு பார்வையாளர்களை அவர்களின் இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறது.

டைனோசர்களின் பிரம்மாண்டம், தீம் பார்க்கின் செயல்பாடு, மரபணு மாற்றுமுறையில் டைனோசர்களை உருவாக்குதல் என ஒவ்வொரு காட்சியும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் க்றிஸ் பிராட் ஆக்ஷன் காட்சிகளிலும், மக்களை காப்பாற்ற முயலும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். டைனோசர்களுக்கு பயிற்சி அளிக்க முயலும் காட்சிகளில் பார்வையாளர்களை கவர்கிறார்.

க்லேய்ரியாக நடித்திருக்கும் பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட் கண்டிப்பான மேலாளராக நடித்துள்ளார். தனது கடமையில் அதிக கவனம் உடையவராகவும், தீம் பார்க்கின் செயல்பாட்டில் எந்த சிக்கலும் வரக்கூடாது என தவிக்கும் இடங்களிலும் திறம்பட நடித்துள்ளார்.

இர்பான் கான், தீம் பார்க்கின் நிர்வாகியாக இயல்பாக நடித்துள்ளார். திரையில் சில நேரம் மட்டுமே தோன்றினாலும் பார்வையாளர்களின் மனதில் பதிகிறார். மேலும் அசாத்திய காட்சியமைப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, கற்பனைக்கு எட்டாத ஆக்‌ஷன் காட்சிகளால் இப்படம் பார்வையாளர்களை கவர்கிறது.

மொத்தத்தில் ‘ஜூராசிக் வேர்ல்டு’ பிரம்மாண்ட உலகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *