தாய்லாந்து செல்லும் தாரை தப்பட்டை

தாய்லாந்து செல்லும் தாரை தப்பட்டை

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘தாரை தப்பட்டை’. இப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாகவும், வரலட்சுமி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். கரகாட்டத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படம் என்பதால் இப்படத்திற்காக மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு இருவரும் நடித்து வருகிறார்கள்.

இப்படத்திற்கு பாலாவின் ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜா இசையமைக்கிறார். இவர் இசையமைக்கும் ஆயிரமாவது படம் இதுவாகும். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சில காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியிருக்கின்றனர்.

சென்னை துறைமுகம் பகுதியில் தற்போது படத்தின் சில காட்சிகளை படமாக்கி வருகின்றனர். அடுத்தக்கட்டமாக தாய்லாந்து தீவுகளில் படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்க செல்லவிருக்கின்றனர். அங்கு படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய பாடலை படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தாய்லாந்து பயணத்தோடு படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிடும் என தெரிகிறது. எனவே, அடுத்தக்கட்டமாக படத்தின் பாடல்களை பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இசைஞானி இளையராஜாவுக்கு இது 1000-மாவது படம் என்பதால், அவரை பெருமைப்படுத்தும்விதமாக இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். வரும் அக்டோபர் மாதம் ‘தாரை தப்பட்டை’ படம் வெளியாகும் என தெரிகிறது.