யானைகள் பற்றி ஜெயராம் எழுதிய புத்தகம்: மம்முட்டி வெளியிட்டார்

மலையாள நடிகர் ஜெயராம், யானைகள் வளர்ப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர். வீட்டிலேயே சொந்தமாக யானை வளர்த்து வருகிறார். இதற்காக தனியாக பாகனும், கால்நடை டாக்டரையும் அமர்த்தி அதனை பராமரித்து வருகிறார்.

கேரளாவில் நடைபெறும் பெரும்பாலான கோவில் விழாக்களில் யானைகள் பயன்படுத்துவதுண்டு. அவ்வாறு விழாக்களுக்கு செல்லும் யானைகள், சில நேரங்களில் மதம் பிடித்து, மிரண்டு ஓடி பொதுமக்களை கொன்று, பொருட்களை துவம்சம் செய்வது அடிக்கடி நடந்து வருகிறது.

இதனால் பொதுமக்களுக்கு யானை என்றாலே பீதி ஏற்படும் நிலை உருவானது.

இது நடிகர் ஜெயராமுக்கு மன வருத்தத்தை கொடுத்தது. யானையின் பண்புகள், அதன் குணாதிசயம், அவற்றை வளர்க்கும் பாங்கு ஆகியவை குறித்து புத்தகம் எழுத விரும்பினார். அதன்படி பல்வேறு நிபுணர்களின் கருத்துக்களை கேட்டும், தனது அனுபவங்களின் வாயிலாகவும், ‘ஆட்கூட்டத்தில் ஆனப்பொக்கம்’ என்ற புத்தகத்தை எழுதினார்.

இதன் வெளியீட்டு விழா திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. பிரபல நடிகர் மம்முட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜெயராம் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார். அதனை ஜெயராம் வளர்க்கும் யானையின் பாகன் குட்டன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மம்முட்டி, புத்தகத்தில் யானைகள் பற்றி ஜெயராம் எழுதிய அனைத்து தகவல்களுமே சுவராசியமாக உள்ளது. படிக்க… படிக்க… ஆர்வத்தை தூண்டுகிறது என்றார்.

நடிகர் ஜெயராம் பேசும் போது, திருவனந்தபுரத்தில் உள்ள கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது அருகில் உள்ள கொடநாட்டில் உள்ள யானைகள் சரணாலயத்திற்கு சென்றேன். அங்கு மம்முட்டி யானைகளுடன் நடித்துக் கொண்டிருந்த காட்சியை கண்டேன். அப்போதே யானைகள் மீது இனம்புரியாத பாசம் ஏற்பட்டது. எனக்கு யானைகள் மீது பிரியத்தை ஏற்படுத்திய மம்முட்டியே, யானைகள் பற்றி நான் எழுதிய புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தேன். எனவேதான் அவரை அழைத்து இந்த புத்தகத்தை வெளியிட்டேன் என்றார்.