உதயநிதியின் கெத்து ரிலீஸ் தேதி அறிவிப்பு

உதயநிதியின் கெத்து ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘நண்பேன்டா’ படத்திற்குப் பிறகு உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கெத்து’. இதில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். மேலும் உதயநிதிக்கு அப்பாவாக சத்யராஜும், வில்லனாக விக்ராந்தும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ‘மான்கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கியிருக்கிறார். உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து உதயநிதி கூறும்போது, ‘இந்த படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்டது. எமிஜாக்சனுடன் மூன்று பாடல்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே மீதி உள்ளது. மூன்று பாடல்களும் விரைவில் படமாக்கப்படும். டிசம்பர் 18-ம் தேதி படத்தை திரையிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன’ என கூறியுள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்களை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.