சொந்த குரலில் பேச ஆர்வம் காட்டும் நடிகைகள்

சொந்த குரலில் பேச ஆர்வம் காட்டும் நடிகைகள்
ஆரம்பகாலத்தில், சொந்த குரலில் பேசினால்தான் சினிமாவில் நடிக்க முடியும் என்ற கட்டாயம் இருந்தது. பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் திரைத்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் காரணமாக பேசத் தெரியாதவர்களும் வாய் அசைத்தால் போதும் எந்த மொழி படங்களிலும் நடிக்கலாம் என்ற நிலை வந்தது.

தமிழ் படங்களில் நடிப்பதற்காக தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் இருந்து நடிகைகள் வந்ததால் அவர்களுக்கு யாராவது டப்பிங் குரல் கொடுத்து வருகிறார்கள். நன்றாக தமிழ் தெரிந்த நடிகைகளும் யாரையாவது ‘டப்பி’ பேச சொல்லிவிட்டு ‘எஸ்கேப்’ ஆகிக் கொண்டு இருந்தனர்.

இப்போது காலம் மீண்டும் மாறிவிட்டது. சொந்தக் குரலில் பேசினால்தான் உணர்ச்சி பூர்வமாக இருக்கும் என்று ஏற்கனவே கமல் கூறி வந்தார். இப்போது தமிழில் முன்னணி நடிகைகளாக இருக்கும் 5 பேர் தங்கள் படத்தில் சொந்த குரலிலேயே பேசுகிறார்கள்.

திரிஷா ஏற்கனவே ‘என்னை அறிந்தால்’ படத்தில் சொந்த குரலில் பேசி இருந்தார். இப்போது கமலுடன் நடித்துள்ள ‘தூங்காவனம்’ படத்திலும் சொந்த குரலில் பேசி இருக்கிறார். தொடர்ந்து பேசவும் முடிவு செய்துள்ளார்.

இதுவரை ‘டப்பிங்’ குரலை நம்பி இருந்த நயன்தாரா ‘நானும் ரௌடிதான்’ படத்தில் சொந்த குரலில் பேசி பாராட்டு பெற்றுள்ளார். அவரும் இனி எல்லா தமிழ் படங்களிலும் சொந்த குரலில் பேச முடிவு செய்து இருக்கிறார்.

‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் சமந்தா சொந்த குரலில் பேசி இருக்கிறார். சுருதிஹாசனும் தனது படங்களில் சொந்த குரலில்தான் பேசுகிறார். லட்சுமிமேனனும் சொந்த குரலில் பேசி வருகிறார். நடிகைகள் சொந்த குரலில் பேசுவதற்கு மவுசு இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.