டெமானிக் – திரை விமர்சனம்

4ad66624d9046d930a8308b77317e29eஜான், தனது காதலி மிச்செல் மற்றும் அவரது நண்பர்கள் ஜூல்ஸ், டோனி, சாம், பிரையன் ஆகியோருடன் லூசியானாவில் இருக்கும் லிவிங்ஸ்டன் இல்லத்துக்கு வருகிறார்கள்.

அந்த இல்லத்தின் உரிமையாளர் மார்த்தா அந்த இல்லத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய ஆவியை அழைத்து, பேசும் முயற்சியில் நண்பர்கள் அனைவரும் களமிறங்குகின்றனர்.

அப்போது நடக்கும் எதிர்பாராத தாக்குதலில் நண்பர்கள் ஜூல்ஸ், டோனி, சாம் ஆகியோர் கொல்லப்படுகிறார்கள். ஜானின் காதலி மிச்செல்லும், மற்றொரு நண்பரான பிரையனும் காணாமல் போகின்றனர். ஜான் மட்டும் அந்த வீட்டில் தனியாக இருக்கிறார்.

இதுகுறித்த தகவல் துப்பறியும் நிபுணரான மார்க் லூயிஸுக்கு செல்கிறது. அவர் லிவிங்ஸ்டன் இல்லத்துக்கு வந்து ஜானிடம் தனது விசாரணையை தொடங்குகிறார். மேலும், மனோதத்துவ நிபுணர் எலிசபெத் க்லெய்ன் என்பவரையும் அங்கு வரவழைத்து ஜானிடம் விசாரணை நடத்துகின்றனர்.

இதற்கிடையில், அந்த இல்லத்தில் இருக்கும் சிசிடிவி கேமிராக்களில் பதிவான வீடியோவை பார்த்தால் அந்த இல்லத்தில் என்ன நடந்தது? என்பதை அறிந்துகொள்ளலாம் என்று நினைக்கும் மார்க் லூயிஸ் அந்த வீடியோக்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை தேடிச் செல்கிறார்.

இறுதியில், அதைத் தேடிக் கண்டுபிடித்து அந்த வீட்டில் நடந்த மர்மங்களுக்கு விடையை கண்டுபிடித்தாரா? நண்பர்களின் சாவுக்கு யார் காரணம்? என்பதை திகிலுடன் சொல்லியிருக்கிறார்கள்.

‘திரில்லர்கள்’ என்ற அடைமொழியுடன் உலகின் பல மொழிகளில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் பேய், பிசாசு, ஆவி, அமானுஷ்யம், பூர்வ ஜென்மம், மறுபிறவி போன்ற கதையம்சங்களுடன் வெளியாகி இருந்தாலும் இவற்றில் சில நூறு படங்கள் மட்டுமே ரசிகர்களை சீட் நுனியில் திகிலுடன் அமர வைத்து சுவாரஸ்யப்படுத்தியுள்ளன.

எஞ்சியுள்ள ஏராளமான படங்கள், ரசிகர்களை கிச்சுகிச்சு மூட்டவும், வெறுப்பேற்றி வேடிக்கை பார்க்கவும் மட்டுமே உதவியுள்ளன.

இந்த இரண்டாம் ரக திரைப்படங்களில் இருந்து மாறுபட்ட ‘திரில்லர்’ படமாகவும், இதைப்போன்ற புதிய பாணிக்கு புத்தாக்கம் அளிக்கும் இந்த ஆண்டின் முதல் படமாகவும் வில் கேனன் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள ‘டெமானிக்’ ஹாலிவுட் படம், பார்வையாளர்களின் வயிற்றில் கிண்ணம், கிண்ணமாக புளியை கரைத்து ஊற்றுகின்றது.

மேக்ஸ் லா பெல்லா, சைமன் ஆகியோர் திரைக்கதைக்கு ஏற்ப காட்சிகள் தத்ரூபமாக அமைத்திருக்கிறார் வில் கேனன். இதற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில், ஒளிப்பதிவில் ரசிகர்களை மிரட்டியிருக்கிறார் மைக்கேல் பிமோக்னரி.

மொத்தத்தில் ‘டெமானிக்’ திக் திக் அனுபவம்.