உலகின் ஆபத்து நிறைந்த பாலங்கள் (Video)

உலகில் உள்ள பல நாடுகளில் பயணிப்பதற்கே பயத்தை ஏற்படுத்தும் பல திகிலூட்டும் பாலங்கள் அமைந்துள்ளன.
உலகில் எத்தனையோ பாலங்கள் அமைந்துள்ளன. இரண்டு வெவ்வேறு இடங்களை இணைப்பதற்கும், தூரத்தினை குறைப்பதற்குமாகவே அமைக்கப்படும் இந்த பாலங்களில் பல திகிலான ஆபத்தான பாலங்களும் பல நாடுகளில் அமைந்துள்ளது.

அவற்றில் சிலவற்றை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பற்றி இப்போது பார்க்கலாம்…

1. Kanopy walk ghana

ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டில் kanopy walk என்ற வினோத தொங்கு பாலம் அமைந்துள்ளது. சுற்றுலாவாசிகளை பெரிதும் கவரும் இந்த பாலம், மிக ஆபத்தான பாலமாகவும், பயம் தரும் பாலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

கானாவில் உள்ள தேசிய பூங்காவின் காடுகளின் ஊடாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாலத்தின் மீது நடந்துகொண்டே சுற்றுலாவாசிகள் செடி கொடிகளையும், வன விலங்குகளையும் பார்த்து செல்லலாம். மிகவும் குறுகலான இந்த தொங்கு பாலம் 300 மீற்றர் நீள‌மூம், கீழே அமைந்துள்ள வனப்பகுதியில் இருந்து சுமார் 40 மீற்றர் உயரத்திலும் அமைந்துள்ளது.

2. Trift bridge

சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த பாலம், இரண்டு மலை குன்றுகளை இணைக்க உதவுகிறது. இந்த பகுதியில் சூழ்ந்திருந்த பனிப்பாறைகள் சில வெப்பமயமாதலால் வேகமாக கரைந்த காரணத்தினால் தான் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆல்ப்ஸ் பகுதியில் உள்ள இந்த தொங்கு பாலம் பாதசாரிகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 170 மீற்றர் நீளம் உள்ள இந்த பாலம், தரையில் இருந்து சுமார் 100 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது.

3. Hussaini hanging bridge

பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த hussaini தொங்கு பாலம் உலகின் மிகவும் ஆபத்தான பாலங்களில் ஒன்று என்பதை புகைப்படத்தினை பார்க்கும் போதே அறிந்து கொள்ளலாம்.

பார்ப்பதற்கே திகிலூட்டும் அனுபவத்தை ஏற்படுத்தும் இந்த தொங்கு பாலம், பல்லாண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பாலத்தின் எச்சங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எளிய கயிறு மற்றும் மரத்தினால் ஆன இந்த பாலத்தின் கீழே ஓடும் நதியின் வேகத்தாலும், வானிலையாலும் இந்த பாலம் அடிக்கடி சேதமாகிறது.

வளர்ச்சியடைந்த பகுதிகளில் மட்டுமே நல்ல சாலை அமைப்புகள் உள்ளதால், மக்கள் வளர்ச்சியடையாத சில பகுதிகளில் இதுபோன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொண்டே முக்கிய நெடுஞ்சாலைகளை அடைய முடியும் என்ற நிலை உள்ளது.

4. Vitim river bridge

ரஷ்யாவின் விடீம் பகுதியில் உள்ள ஆற்றை கடப்பதற்காக இந்த ‘விடீம் ரிவர்’ பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

வெறும் மரக்கட்டைகளை கொண்டு அடுக்கப்பட்டுள்ள இந்த ஆற்று பாலத்தினை, அந்தப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் மிக‌ எளிமையாக வடிவமைத்துள்ளனர்.

இந்தப் பாலம், ஆற்றின் மீது மிதக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆற்றின் நீர்மட்டத்தை பொறுத்து பாலம் உயர்ந்தும் தாழ்ந்தும் இருக்கும் படி இதனை வடிவமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாலத்தின் இரு பக்கவாட்டு பகுதிகளிலும், பாலத்தை நீர் மட்டத்திற்கு ஏற்ப நிலைநிறுத்தி கொள்ளும் வகையில், சக்கரங்களால் ஆன ராட்டின அமைப்பு உள்ளது.

5. The Royal Gorge bridge

அமெரிக்காவில் உள்ள அர்கான்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த பாலம், அங்குள்ள அர்கான்சாஸ் நதியில் இருந்து சுமார் 955 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மிக உயரமான மற்றும் ஆபத்தான இந்த பாலத்தில் பேஸ் ஜம்பிங் என்னும் சாகச விளையாட்டு பிரியர்கள், அதிகளவில் சாகசம் புரிய விரும்புகின்றனர்.

இந்த பாலத்தின் மேல் இருந்து பேஸ் ஜம்பிங் போல பல சாகசங்களும் நிகழ்த்தப்படுகின்றன. இதனால் இந்த பாலத்திற்கு வருகை தரும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கையும் அதிகமாகவே காணப்படுகிறது.

6. Puente de Ojuela

மெக்சிகோவின் ‘பியூண்டி டீ ஓஜூலா’ பாலம் சாகசங்களை விரும்புவர்களின் மற்றொரு விருப்ப தேர்வாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.

மெக்சிகோவின் ‘பியூண்டி டீ ஓஜூலா’ பாலம் ஆரம்ப காலகட்டத்தில், இரண்டு மலைகளுக்கு இடையே அமைந்திருந்த சுரங்கத்தை இணைக்கும் வகையில் 19-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.

ஆனால் தற்போது பெருமளவில் சாகச நடைபயணத்திற்காகவே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் மட்டுமே நடந்து செல்லும் வகையில் மிகவும் குறுகலாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் மிகவும் நெடியது.

மேலும், இந்த பாலத்தினை மலைகளை ரசிக்கவும், திகிலான நடை பயண சாகசங்களுக்கும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பயண நேரத்தை குறைக்கவும், தூரத்தை எளிதாகவும் பாதுகாப்பாகவும் கடக்கவே பாலங்கள் அமைக்கப்பட்டாலும், அவற்றிலும் பல பாலங்களை கடந்து செல்வது சுலபமாக இருப்பதில்லை.

வளர்ந்த நாடுகள் சிலவற்றிலும் மற்றும் பல வளரும் நாடுகளிலும் உள்ள இம்மாதிரியான பல ஆபத்தான பாலங்களை கடந்து தான் பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாழ்வாதாரத்தை தேடி செல்கின்றனர் என்பதனை நினைத்து பார்க்கவே முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *