அஜித்துக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக புரளி கிளப்பியவர் கண்டுபிடிப்பு

அஜித்துக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக புரளி கிளப்பியவர் கண்டுபிடிப்பு
அஜித் நடித்துள்ள ‘வேதாளம்’ படத்தை தீபாவளிக்கு திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில், கடந்த 23–ந்தேதி அஜித்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதாக தகவல் பரவியது.

அஜித் மானேஜருடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தி வெளியாகி இருந்தது. இதனால் அஜித் பற்றி வந்த செய்தி அவருடைய ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உண்மையை அறிய ரசிகர்கள் துடித்தனர். முக்கிய பிரமுகர்கள் சிலர் அஜீத் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அஜித் மானேஜர், தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித் உடல்நலத்துடன் நன்றாக இருக்கிறார். தவறான உள்நோக்கத்துடன் யாரோ வதந்தியை பரப்பி இருக்கிறார்கள். அதை நம்ப வேண்டாம். அந்த செய்தியை யாரும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று கூறி இருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

அஜித் பற்றி தவறான வதந்தியை பரப்பியது யார் என்பது குறித்து அஜித் மானேஜர் விசாரணை நடத்தி வந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:– அஜித் பற்றி இதுபோன்ற போலியான தகவல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனது டுவிட்டர் பக்கம் போலவே போலி கணக்கு தொடங்கி இந்த செய்தியை வெளியிட்டு இருந்தனர்.

இந்த தவறான தகவலை எனது பெயரில் வெளியிட்டது யார் என்பதை கண்டுபிடித்து விட்டோம். ஆதாரங்களை திரட்டி வருகிறோம். என் பெயரில் போலி டுவிட்டரில் கணக்கு தொடங்கி அஜித் பற்றி வதந்தி பரப்பியவர் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.