6 மாத குழந்தையின் இதய ஆபரேசனுக்கு உதவிய லாரன்ஸ்

6 மாத குழந்தையின் இதய ஆபரேசனுக்கு உதவிய லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பு தவிர பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் 2 படங்களில் நடித்து இயக்குவதற்காக பெற்ற முன்பணம் ரூ.1 கோடியை 100 இளைஞர்கள் மூலம், ஏழைகளுக்கு உதவ ஏற்பாடு செய்தார். இது தவிர அவரது சொந்த அறக்கட்டளை மூலமும் உதவிகள் செய்து வருகிறார்.

சமீபத்தில் 400 குழந்தைகளின் கல்விக்கான முழு செலவையும் ஏற்றுள்ளார். சென்னையில் 200 குழந்தைகளையும், வெளியூர்களில் 200 குழந்தைகளையும் தேர்வு செய்து எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை இவர்கள் பிரபல கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கான முழு கட்டணத்தையும் தனது அறக்கட்டளை மூலம் செலுத்துவதாக அறிவித்து உள்ளார்.

இன்று ராகவா லாரன்சின் பிறந்த நாள். இதை இவர் வழங்கும் கல்வி தொகையில் படிக்கும் 400 குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ விரும்பினார். இதற்காக இந்த குழந்தைகளை அம்பத்தூர் ராகவேந்திரா கோவிலுக்கு வரவழைத்தார்.

அவர்களுடன் தனது பிறந்த நாளை ராகவா லாரன்ஸ் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். அனைவருக்கும் இனிப்பும் உணவும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே பிறந்து 6 மாதமே ஆன குழந்தைக்கு இதய ஆபரேஷன் செய்வதற்கும் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் உதவி செய்துள்ளார். திருவண்ணாமலையைச் சேர்ந்த லாரன்ஸ் சின்னப்பன் – மேரி தம்பதியரின் குழந்தை புனித். இதய ஆபரேஷனுக்கு பிறகு அந்த குழந்தை நலமாக இருப்பதாக இன்று தகவல் கிடைத்தது.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறியதாவது:–

இதுவரை 300 குழந்தைகளுக்கு மேல் அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்திருக்கிறேன். ஆனால் இந்த புனித் பிறந்து ஆறு மாதத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன். அறுவை சிகிச்சை செய்து குழந்தை நலமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த குழந்தையின் பெற்றோர்களின் ஆசிர்வாதம் மட்டுமல்லாமல் அந்த முன்னூறுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களின் ஆசிவாதமும் அந்த கடவுளின் ஆசிர்வாதமும் அவருக்கு எப்போதும் உண்டு என்று ராகவா லாரன்ஸ் உதவி பெற்று கல்வி பெறும் குழந்தையின் தாயார் ஒருவர் கூறினார்.