யூகன் – திரை விமர்சனம் | yukan – Reviews

யஸ்மித், சித்து, ஷாம், பிரதீப் பாலாஜி, மனோஜ் ஆகியோர் ஐ.டி.கம்பெனியில் ஒன்றாக வேலை செய்கிறார்கள். நண்பர்களான இவர்களில் மனோஜ் மர்மான முறையில் இறக்கிறார்.

இதனால் அதிர்ந்து போகும் நண்பர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்கிறார்கள். போலீஸ் முதலில் இவர்கள் நான்கு பேரை விசாரித்து வருகிறார்கள். இதன்பிறகு ஷாம் மற்றும் பிரதீப் பாலாஜி ஆகியோரும் அடுத்தடுத்து மர்மான முறையில் இறக்கிறார்கள்.

இதையடுத்து போலீஸ் தீவிரமாக விசாரிக்க ஆரம்பிக்கிறது. மீதமுள்ள யஸ்மித் மற்றும் சித்துவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துகிறார்கள். மேலும் கொலைக்கான காரணத்தையும் தேடி வருகிறார்கள்.

இந்த விசாரணையில் ஒரு பெண்ணுடைய போனில் இருந்து எம்.எம்.எஸ். வந்த பிறகுதான் இவர்கள் மூன்று பேரும் இறந்திருக்கிறார்கள் என்று கண்டறிகிறார்கள். அந்த பெண் யார்? இவர்களை அவள் கொல்ல காரணம் என்ன? மீதமுள்ள இரண்டு பேரும் உயிர் பிழைத்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் யஸ்மித் அறிமுக நாயகன் போல் இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். நண்பர்களாக வரும் சித்து, ஷாம் பிரதீப் பாலாஜி, மனோஜ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

நாயகியான சாக்‌ஷி அகர்வாலுக்கு முதல் பாதியில் வேலையே இல்லை. இரண்டாம் பாதியில் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வழக்கமான நாயகிகள் செய்யும் ஆடல், பாடல் காட்சிகள் சாக்‌ஷி அகர்வாலுக்கு கிடைக்கவில்லை.

ஐ.டி. கம்பெனியில் நடைபெறும் பிரச்சனையை மையப்படுத்தி அதில் திகில் கலந்த படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கமல் குமார். திகில் மற்றும் பல திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்திருக்கிறார். சிம்பிலான ஸ்கிரிப்ட்டை லாவகமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

இப்படத்திற்கு இவரே எடிட்டிங் செய்திருக்கிறார். திகில் படத்திற்குண்டான எடிட்டிங்கை செவ்வனே செய்திருக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமல் கேமரா தந்திரம் மற்றும் ஒப்பனைகள் மூலமாக திகில் காட்சிகளை நேர்த்தியாக படம்பிடித்திருப்பது படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

ரஷாந்த் அர்வின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ரவி ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

மொத்தத்தில் ‘யூகன்’ வேகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *