சல்மான் கானுக்கு 5 வருட சிறை

 

சல்மான் கானுக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பைக் கேட்டதும் நீதிமன்றில் அவர் அழுததாக தெரிவிக்கப்படுகின்றது.

கார் விபத்து வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என்று மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை அளித்துள்ளது.

இதனையடுத்து இன்னும் சிறிது நேரத்தில் அவருக்கான தீர்ப்பு அளிக்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

விபத்தின் போது சல்மான்கான் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள நீதிபதி, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் மீதான 7 குற்றச்சாட்டுக்களை நீதிபதி உறுதிசெய்துள்ளார். மற்றையவரின் பாதுகாப்பை அபாயத்துக்குள்ளாக்கியமை, குடிபோதையில் வாகனம் ஓட்டியமை, விபத்து தொடர்பில் பொலிஸுக்கு அறிவிக்காமை, விபத்தில் பின் அவ்விட த்தை விட்டு சென்றமை போன்றவை அதில் அடங்குகின்றது.

கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் திகதி நடிகர் சல்மான்கான், மும்பையில் மதுபோதையில் வேகமாக கார் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதாக பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் வீதியோரம் படுத்து தூங்கி கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் சல்மான்கானின் கார் ஏறி இறங்கியதில், 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

ஆரம்பத்தில், இந்த வழக்கை விசாரித்த மும்பை மஜிஸ்திரேட் நீதிமன்றம் பின்னர் விசாரணையை ‘செசன்ஸ்’ நீதிமன்றத்திற்கு மாற்றியது.

அதன்படி, செசன்ஸ் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய குற்றப்பிரிவின்கீழ் மறுவிசாரணை தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் காயம் அடைந்த கலிம் முகமது பதான், முன்னா மலாய் கான், அப்துல்லா ராப் சேக், முஸ்லிம் சேக் மற்றும் சல்மான்கானின் பக்கத்து வீட்டுக்காரர் பிரான்சிஸ் பெர்னான்டஸ் மற்றும் சல்மான்கானின் போலீஸ் மெய்க்காவலர் ரவீந்திர பாட்டீல் உள்ளிட்ட பலர் நேரில் ஆஜராகி சாட்சி அளித்தனர்

சல்மான் கான் மறுப்பு

சல்மான்கானுக்கு எதிராக பலர் சாட்சி அளித்ததன் காரணமாக, இந்த வழக்கின் விசாரணை சூடுபிடித்தது. மேலும், விசாரணை இறுதிகட்டத்தை நெருங்கிய நிலையில், சல்மான்கானிடம் நீதிபதி தேஷ்பாண்டே விசாரித்தபோது, ‘‘சம்பவத்தின் போது நான் கார் ஓட்டவும் இல்லை, மது அருந்தவும் இல்லை. என்னுடைய டிரைவர் அசோக் சிங் தான் காரை ஓட்டினார்” என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து டிரைவர் அசோக் சிங், நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது, நடிகர் சல்மான்கான் அளித்த வாக்குமூலத்துக்கு அவர் வலுசேர்க்கும் வகையில், விபத்துக்குள்ளான காரை நான் தான் ஓட்டினேன் என்று குறிப்பிட்டார்.

13 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வரும் வேளையில், திடீரென்று நீங்கள் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பதன் நோக்கம் என்ன? என்று நீதிபதி கேட்டதற்கு, இந்த வழக்கின் தன்மை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று அசோக் சிங் பதிலளித்தார்.

அதன்பின்னர், சல்மான்கான் தரப்பு வக்கீல் ஸ்ரீகாந்த் சிவாடே மற்றும் அரசு தரப்பு வக்கீல் பிரகாஷ் காரத் ஆகியோருக்கு இடையே நடந்த காரசார வாதத்துக்கு பின்னர், இருவரது வாதமும் கடந்த மாதம் 21-ந் திகதியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து,
மே 6ஆம் திகதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறுவதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், அன்றைய தினம் சரியாக காலை 11.15 மணிக்கு சல்மான்கான் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி, சல்மான்கான் மீதான கார் விபத்து வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படுகிறது. இதையொட்டி, நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது . தீர்ப்பினை அறிந்துகொள்ள மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் சல்மான்கான் ஆஜரானார்.

இதனிடையே காலை 11.15 மணிக்கு தீர்ப்பை வாசித்த நீதிபதி சல்மான்கான் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். சம்பவ தினத்தன்று கார் ஓட்டிய சல்மான்கான் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். சல்மான்கானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *