என் படங்களுக்கு எதிர்ப்புகள் தொடர்கிறது: கமலஹாசன் பேட்டி | My pictures opposition continues: Kamal Interview

நடிகர் கமலஹாசன் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:–

கேள்வி:– உங்களது சமீபத்திய படங்கள் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறதே ஏன்?

பதில்:– ஒரு சினிமா படத்தை எடுப்பது எளிது. ஆனால் அதை ரிலீஸ் செய்வது கஷ்டமாக இருக்கிறது. என் படங்களுக்கு சிலர் தேவையில்லாமல் பிரச்சினைகளை கிளப்பி வருகிறார்கள். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இப்படி எதிர்ப்புகள் வருவது சரியல்ல. நான் யாருக்கும் எதிரான படங்கள் எடுக்கவில்லை. இங்கு இந்துக்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான படங்களை நான் எடுக்க முடியுமா?

அதுபோல் முஸ்லிம், ஜெயின் உள்ளிட்ட எந்த மதத்தினருக்கும் எதிரான படங்களை எடுக்க மாட்டேன். இந்து, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் என் சகோதரர்கள் ஒரு குடும்ப உறுப்பினர்கள். எல்லோரும் ஒரே குடும்பத்தினர். எனவே எந்த மதத்துக்கும் எதிராகவோ அரசியல் கட்சிகளுக்கு எதிராகவோ படம் எடுக்க மாட்டேன்.

என் படங்களை எதிர்ப்பவர்கள் மிக சிலர்தான். தொடர்ந்து என் படங்களுக்கு ஏன் பிரச்சினைகளை கிளப்புகிறார்கள் என்று புரியவில்லை. ‘உத்தம வில்லன்’ படத்துக்கு எதிரான வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.

நடிகர், நடிகைகள் உள்ளிட்ட கலைஞர்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். அவர்களை வேதனைப்படுத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கே:– உங்கள் படங்களுக்கு எதிர்ப்புகள் வருவதால் ரசிகர்கள் கவலை அடைந்து இருக்கிறார்களே?

ப:– என் ரசிகர்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம் இத்தகு எதிர்ப்புகளை கண்டு கோபப்படவோ வருத்தப்படவோ கூடாது. அவரவர் வேலையை அவரவர் செய்து கொண்டு இருங்கள்.

கே:– டி.டி.எச்.சில் படத்தை வெளியிடும் திட்டத்தை கைவிட்டு விட்டீர்களா?

ப:– அந்த முயற்சியை கைவிட மாட்டேன். அதற்கு போதிய ஆதரவு இன்னும் கிடைக்கவில்லை.

கே:– உத்தமவில்லனில் பாலசந்தர் நடித்து இருப்பது பற்றி?

ப:– பாலசந்தர் என் குருநாதர். அவர் இயக்கத்தில் நிறைய படங்களில் நடித்து இருக்கிறேன். அவரும் டைரக்டர் கே.விஸ்வநாத்தும் இந்த படத்தில் நடித்து உள்ளனர். இது பெருமையாக இருக்கிறது. இரு இயக்குனர்களும் ஆராதனைக்கு உரியவர்கள்.

கே:– உத்தமவில்லன் என்ன கதை?

ப:– ஒரு நடிகனின் வாழ்க்கையே இப்படத்தின் கதை. இதில் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறேன். எனக்கு முக்கியமான படம் இது. ஒரு குரூப் நடன காட்சி வித்தியாசமாக படமாக்கப்பட்டு உள்ளது. ஹாலிவுட் சினிமாவின் தெளிவு இப்படத்தில் இருக்கும்.

கே:– கதாநாயகிகள் பற்றி?

ப:– ஆண்ட்ரியாவும், பூஜாகுமாரும் கேரக்டருக்கு பொருத்தமாக இருந்ததால் இதில் நடித்துள்ளனர். ஏற்கனவே ஸ்ரீதேவியுடன் 24 படங்களிலும், ஸ்ரீப்ரியாவுடன் 27 படங்களிலும், குஷ்புவுடன் ஆறேழு படங்களிலும் நடித்து இருக்கிறேன்.

கே:– அறுபது வயதிலும் இளமையாக இருக்கிறீர்களே எப்படி?

ப:– மனதுதான் காரணம். வயது என்பது உடம்புக்குதான். மனதுக்கு அல்ல.

இவ்வாறு கமலஹாசன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *