இரிடியம் – திரை விமர்சனம் | Iridium – Screen Review

தஞ்சாவூரை ஒட்டியுள்ள கிராமத்தில் கோவில் கலசத்திற்குள் இரிடியம் இருப்பதாகவும் அதை விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்றும் சொல்லி இதை வாங்க வருபவர்களை ஏமாற்றி வருகிறார்கள் அந்த ஊரின் செல்வந்தர்கள்.

இந்த செல்வந்தரில் ஒருவனின் தம்பி தன் பார்வையாலேயே வசியம் செய்கிற சக்தியையும், தான் பார்க்கும் அரிசியை எழ வைக்கிற சக்தியையும் படைத்திருக்கிறார்.

இந்த சக்தியை பயன்படுத்தி வெளியூரில் உள்ள செல்வந்தர்களை விலை மதிப்புள்ள இரிடியம் இருப்பதாக கூறி தங்கள் ஊருக்கு வரவழைத்து தனது சக்தியால் செல்வந்தர்களின் பணத்தை பெற்றுக் கொண்டு, அவர்கள் தானாகவே தற்கொலை செய்யும் படியாகவும் செய்து வருகிறார்.

இந்நிலையில் மர்மமான முறையில் சிலர் தற்கொலை செய்துக்கொள்ளும் விஷயம் அந்தப் பகுதியின் இன்ஸ்பெக்டரான மோகன் குமாருக்கு தெரியவருகிறது. தனிப்படை அமைத்து இதற்கெல்லாம் காரணமானவர்களை தேடி வருகிறார்.

இதற்கிடையில், கல்லூரி படித்து வரும் நாயகி ஆருசியை அதே கல்லூரியில் படிக்கும் நாயகன் ஒருதலையாக காதலித்து வருகிறார். ஆருசி வெளிநாட்டிற்குச் சென்று நன்கு சம்பாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்து வருவதால் அவரிடம் நாயகன் தன் காதலை சொல்லாமலே இருந்து வருகிறார். இருந்தாலும் ஆருசியிடம் நட்போடு பழகி வருகிறார்.

ஒரு கட்டத்தில் தன் காதலை சொல்லும் நாயகனை, ஆருசி ஏற்றுக்கொள்கிறார். ஆருசியின் லட்சியத்தையும் நிறைவேற்ற அவருக்கு தேவையான பாஸ்ட்போர்ட் உள்ளிட்ட பல உதவிகளை செய்து கொடுக்கிறார்.

இறுதியில் நாயகி வெளிநாடு சென்றாரா? நாயகனும் நாயகியும் ஒன்று சேர்ந்தார்களா? போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் குமார், செல்வந்தர்கள் சாவுக்கு காரணமான குற்றவாளியை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் போலீசாக நடித்திருக்கும் மோகன் குமார், அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப மிடுக்காக வலம் வருகிறார். நாயகி ஆருசி துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார். பார்ப்பதற்கு அழகாகவும் அளவான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகனாக நடித்திருப்பவர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

இயக்குனர் ஷாய் முகுந்தன் இரிடியத்தை மையமாக வைத்து அதில் மர்மம், காமெடி மற்றும் காதல் கலந்து கொடுத்திருக்கிறார். ஆனால், திரைக்கதையை சுவாரஸ்யம் இல்லாமலேயே அமைத்திருக்கிறார்.

யஷ்வந்த் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். கோபி சபாபதியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. காட்சிகள் அனைத்தும் தெளிவாக உள்ளன.

மொத்தத்தில் ‘இரிடியம்’ வலிமை இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *