நடிகை திரிஷாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்

பாலகிருஷ்ணா, திரிஷா, ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ள படம் ‘லயன்’. வருகிற 25–ந்தேதி இப்படம் ரிலீசாகிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

திரிஷாவும் இவ்விழாவில் பங்கேற்றார். பாடல் சி.டி.யை சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து அவர் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் திரிஷா கலந்து கொண்டதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் சென்னை மண்டல செயலாளர் வீரமாணிக்கம் சிவா வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

20 தமிழர்களை ஆந்திர போலீசார் குரூரமாக கொன்று குவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு நிலவுகிறது. ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை கண்டித்து போராட்டங்கள் நடக்கின்றன. மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொலையுண்ட தமிழர்களின் ரத்த கறை காயும் முன்பே சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பட விழாவில் திரிஷா கலந்து கொண்டு அவருடன் சிரித்து பேசியது தமிழர்கள் உணர்வை புண்படுத்துவதாக உள்ளது.

இந்த விழாவை திரிஷா புறக்கணித்து இருக்க வேண்டும். குறிப்பாக தமிழர்கள் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுவதை நடிகைகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நடிகைகள் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு நாய் காரில் அடிபட்டு காயம்பட்டு கிடந்ததற்கே கவலைப்பட்டு துடித்து போனவர் திரிஷா. அப்படிப்பட்டவர் 20 தமிழர்களை கொன்றவர்களுடன் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *