சினிமாவில் தான் நான் ஹீரோ, நிஜ வாழ்க்கையில் கவுதமி தான் ஹீரோ: கமலஹாசன் பேச்சு

27507cdf-c290-4d0e-b646-95e269bacda7_S_secvpfதெலுங்கு திரையுலகில் பலர் புற்று நோயால் மரணம் அடைந்த சோகம் நிகழ்ந்தது உண்டு. சமீபத்தில் நடிகர் அவுதி பிரசாத் புற்று நோய் தாக்கி மரணம் அடைந்தார்.
இந்த நிலையில், நாம் நினைத்தால் புற்று நோயை ஓட ஓட விரட்டி விடலாம் என்றும் அதற்கு உதாரணம் கவுதமி என்றும் நடிகர் கமலஹாசன் கூறினார்.
ஐதராபாத்தில் ‘யசோதா இன்டர்நெஷனல் கேன்சர்’ மாநாடு நடந்தது. மாநாட்டை நடிகர் கமலஹாசன் தொடங்கி வைத்தார். பிரபல டாக்டர் மம்பன் சாந்தி, துணை முதல்–மந்திரி ராஜய்யா, நடிகை கவுதமி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கமலஹாசன் பேசியதாவது:–
‘‘புற்று நோய் வந்தால் நமது வாழ்க்கை அவ்வளவுதான். முடிந்து போச்சு., விரைவில் இறந்து விடுவோம்’’ என்று பலர் நினைக்கிறார்கள்.
இது வெறும் பயம்தான். புற்றுநோயை உடனடியாக கண்டு பிடித்து சரியான மருந்து சாப்பிட்டால் அந்த நோயை விரட்டி விடலாம். இதற்கு முன் உதாரணம் கவுதமிதான். புற்றுநோய்க்கு அவர் பணிந்து விடவில்லை. அதை எதிர்த்து தைரியமாக போராடினார். இறுதியில் அதனை விரட்டினார்.
சினிமாவில்தான் நான் ஹீரோ. ஆனால் நிஜவாழ்க்கையில் கவுதமி தான் ஹீரோ. அவருக்கு முன்னால் நான் துணை நடிகர்தான். நம்பிக்கையுடன் செயல்பட்டால் புற்றுநோயை எளிதில் விரட்டி விடலாம்.
இவ்வாறு கமலஹாசன் கூறினார்.
நடிகை கவுதமி பேசியதாவது:– எனக்கு கேன்சர் வந்ததை மருத்துவர்கள் யாரும் பரிசோதனை செய்ய சொல்லவில்லை. நான் படித்த அறிவினால் அதனை தெரிந்து கொண்டேன்.
இதற்காக சிகிச்சைக்கு சென்றேன். முதலில் ஹீமோ தெரபி செய்தேன். மறுபடியும் கேன்சர் வந்தது. மீண்டும் சிசிச்சை எடுத்தேன். எனது தைரியத்தை இழக்கவில்லை. இறுதியில் கேன்சரை விரட்டினேன்.
எந்த வியாதியையும் ஒருவர் நினைத்தால் அதனை விரட்டி விட முடியும். உடலில் உயிர் இருக்கும் வரை அதனை எதிர்த்து போராட வேண்டும். தன்னம்பிக்கையை இழக்க கூடாது.
இவ்வாறு கவுதமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *